Monday, August 8, 2016

பயணம்



காலைப் பணிக்குத் தவறாமல் தாமதமாய்
நாளைக் குறைகூறி வண்டியில் அமர்ந்திருக்க
வேலைப்பளுவதுவும் வெப்பமும் தலைசூழ
நாளைக்குத் தள்ளினேன் சின்னக்குழப்பத்தை

சிவப்பு விளக்கதனை முறைத்து நிறுத்தினேன்
காவலனாலன்றிக் காமத்தாலல்ல
பக்கத்து வண்டிகளும் அங்ஙனமே நிற்க
கவனம் திருப்பினேன் தொண்ணூறு நொடிகொல்ல

குடிசைக் கடைகள் வரிசையாய்
கடைசிக் கடையில் சனம் வரிசையாய்
கவரும், கூடையும், பையேந்தி நிற்கும்
கதரும், பேண்டும் , கைலியும் பனியனும்

வேர்வை துடைத்துத் தள்ளிப் பார்த்தேன்
பார்வையில் பட்டது கூண்டுக் கோழி

கதவு திறந்து அதன் கனவு அடைக்கப்பட்டது
கால்களும் கழுத்தும் பத்திரமாய் கரங்களுக்குள்

ஓலத்தை வாய்வழியும்
உயிர்பயத்தைக் கண்வழியும்
பதைபதைப்பைக் கால்களிலும்
பரபரப்பை றெக்கையிலும்
ஒருசேரத் தெரிவித்தது

கையில் பிடித்தவனுக்கு அது ஒரு சடங்கு
சமிக்ஞைகளை அவன் சட்டைசெய்வதில்லை

கத்தியைப் பார்த்தது கோழி
கத்தியும் கதறியும் பார்த்தது
விழிவிரித்து உலகைப் பார்த்தது
கத்தி இறங்குதற்கு இருநொடிமுன்னால்
விழிகள்மூடி அமைதியானது
விதியறிந்த முனிவன்போல

பச்சை விழுந்தது...
பயணம் தொடர்ந்தது

- சகி

4 comments:

  1. சகி ,அன்றாட நிகழ்வுகளில்,வழிந்தோடும் வாழ்க்கையை,அரைபக்கத்தில் அம்சமாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்.தங்கள்,சொற்களின் வழியாக,கடையின் கசகசப்பும்,வாடிக்கையாளர்களின் மரத்ததுப் போன‌ முகங்களும்,டராஃபிக் புகையும் என் மனக்கண் முன் அப்படியே விரிகின்றன.
    சிவப்பு பச்சை விளக்கு,மற்றும் கதவு திறந்து கனவு அடைக்கப்படும்,மற்றும் கோழியின் சரணாகதி வரிகளில் உள்ள முரண்,வாழ்கையின் பல "ஏன்" களை, மனதில் எழ செய்து,தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    சிவப்பு விளகு துக்கடா,மெல்லிய சிரிப்பை வரழைத்தது.

    ஒரு உருக்கமான காட்சியை கண் முன் பார்த்த அனுபவத்தை குடுத்தீர்கள்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்ததுமின்றி ரசனையான விளக்கமும் தந்தமைக்கு நன்றி

      Delete
  2. 'கத்தி'யும் பார்த்தது. அதனால் கதறியும் பார்த்தது!! என் செய்ய, 'கத்தி' கதறலை விட கூர்மையாக இருந்து விட்டதே?

    சிவப்பு விளக்கு எரிகையில்
    அதே வண்ண இரத்தம் தரையில்...
    பச்சை விழுந்தது... ஆனால் கோழியின் பயணம் முடிந்தது!!

    ஒவ்வொரு உயிரின் முடிவும் வித்தியாசமாய்!

    ReplyDelete
  3. வாழ்க்கையின் வண்ணங்களிலும் முரணா? பதிலிலும் எழில்தான் போங்கள். பதிவைப் படித்தமைக்கும், பதிலை வடித்தமைக்கும் நன்றி

    ReplyDelete