Showing posts with label சினியன். Show all posts
Showing posts with label சினியன். Show all posts

Saturday, January 2, 2016

24 நாட்கள்


24 jours, la vérité sur l'affaire Ilan Halimi ( 24 Days: The True Story of the Ilan Halimi Affair)


மொழி : ஃப்ரென்ச்
இயக்குனர் : அலிக்ஸாந்த்ரே ஆர்கேடி
வருடம்: 2014



நிஜ சம்பவங்களை மையமாக வைத்துத் திரைப்படம் எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்றது. உள்ளதை உள்ளபடி காட்டினால் ஆவணப்பட சாயல் வந்துவிடும். சுவாரசியம் கூட்டுகிறேன் பேர்வழி என்று நடக்காததையெல்லாம் கூட்டினால், உண்மை தொலைந்து போகும். அதுவும் ஒரு உலகப் பிரபலமான சம்வத்தை, அண்மையில் நடந்தவற்றை, பாரீஸ் நகரமே கொதித்துக் கொந்தளித்த, உள்ளங்களை உலுக்கிய சம்பவத்தைத் திரைப்பட வடிவில் தருவது சாதாரண விஷயமல்ல.


பாரீஸ் நகரில் வசிக்கும் ஒரு நடுத்தர யூத குடும்பத்தைச் சேர்ந்த இலான் ஹலிமி, ஒரு செல்ஃபோன் விற்பனையாளன். அப்பா பிரிந்து சென்று இருபது வருடங்களாய், அம்மா (ரூத் ஹலிமி) தலைமையில் குடும்பம். அண்ணனும் அண்ணியும் தனியே வசிக்க, அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கையுடனும், தாயுடனும் அன்னியோன்யமான வாழ்க்கை. குடும்பத்துக்கு அறிமுகமான காதலி. சுயதொழில் செய்வது லட்சியம். அதற்கு அப்பாவின் கையை எதிர்பார்க்காத சுய கவுரவம்.

ஒரு நாள் இரவு, ஷப்பாத் உணவுக்குப் பின்னர் அன்று காலையில் அறிமுகமான அழகுப் பெண்ணின் அழைப்பு வர, சபலத்தில் புறப்படுகிறான். அம்மா அவனுக்காய் வாங்கி வந்திருக்கும் புதுக் காலணியைப் போட்டுப் பார்க்கவும் பொறுமையின்றி செல்கிறான்.


மறுநாள் வரை திரும்பாததால் குடும்பத்தார் கவலைப்பட ஆரம்பிக்கின்றனர். அவன் காதலி தனக்கு வந்த மின்னஞ்சலைத் திறக்க முடியாமல், இவன் வீட்டுக்கு அழைக்கிறாள். இலானின் அண்ணனின் உதவியுடன் திறந்தால், முகமெல்லாம் பசைநாடாவுடன் ( gum tape) , இலானின் முகம். கூடவே ஒரு மிரட்டல் செய்தி- உடனடியாக 450,000 யூரோக்கள் செய்யாவிட்டால் கொன்றுவிடுவோமென்று.

பிரிந்து வாழும் தந்தைக்கும் இதே மிரட்டல் வர, கமாண்டண்ட் டெல்கூர் தலைமையிலான காவல் துறையை அணுகுகிறார்கள். தொடர்ந்து வரும் கொலை மிரட்டல் அழைப்புக்களை எதிர்கொள்ள , உளவியல் மற்றும் குரல் ஆய்வாளரான சில்வி டெஸ்டூடை குழுவில் இணைக்கிறார்கள். மிரட்டல் அழைப்புகள் ஃப்ரான்ஸின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் ஐவரி கோஸ்ட் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் வருவது கண்டு திகைக்கின்றனர்.மேலும் கடத்தியவர்களின் கோரிக்கைகள் மற்றும் மீட்புப்பணம் (450, 50, 150 என்று) மாறிக் கொண்டே இருக்கிறது கண்டு திகைத்துப் போகிறார்கள். மேலும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காய், இலானின் தந்தையான டிடியர் ஹலிமி, இவர்கள் பக்கத்திலிருக்கும் பிரதான பேச்சுவார்த்தையாளராகிறார். தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.

காவல் துறையின் பல முயற்சிகளும் பலனளிக்காது போகவே, இலானின் குடும்பம் (காதலி, தங்கை மற்றும் தாய்) அவர்கள் மேல் நம்பிக்கை இழக்கிறது. செய்வதறியாது துடிக்கிறது. நெஞ்சு வெடிக்கிறது. கேள்விகளாய், வாதங்களாய், கெஞ்சல்களாய் தங்கள் இயலாமையையும் ஆற்றாமையையும் கொட்டுகிறார்கள்.

கடத்திய கூட்டத்தின் தலைவனான ஃபோஃபானா காட்டு மிருகமாக அறிமுகமாகிறான். டிடியருடன் அவன் நடத்தும் பேச்சு வார்த்தைகள் ( 20 நாளில் 600 முறை) ஒவ்வொன்றும் அரை நிமிடத்திற்குள்ளேயானாலும், ஒரு முட்டாள்தனமான ஆவேசம். அதன் காரணமாகவே அவன் என்னவும் செய்யக்கூடும் என்ற அச்சம். அவன் ஆட்களை அவன் கட்டுக்குள்ளே வைத்திருந்தாலும், பல நாட்களாய் ஒன்றும் செய்யாது இலானை ஒரு கட்டிப் போட்ட பொட்டலமாக காப்பதினால் அவர்களும் பொறுமையை இழக்கின்றனர்.

இலானின் குடும்பம், காவல் துறை , கடத்தல் கும்பல் என்ற முக்கோணப் பார்வையில் செல்கிறது படம். இது தீர்க்கப்பட்ட வழக்காதலால், குற்றக் களத்தின் கூற்றையும் முழுதாகக் காட்ட முடிகிறது. கதையின் ஒரு எழுத்தாளர் இலானின் தாயான ரூத் ஹலிமி என்பதால் குடும்பத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளையும் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்.

கில்ஸ் ஹென்ரியின் கேமரா கோணங்கள், வண்ணங்கள், டோனி எக்ரியின் கலை வடிவமைப்பு மற்றும் எரிக் பெர்ரோனின் ஆடை வடிவமைப்பு எல்லாமே கதாபாத்திரங்களின் மனநிலை நீட்சியாகவே தெரிகின்றன.



எல்லோருமே அவரவர் பாத்திரங்களைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், ரூத் ஹலிமியாகவே உலாவி நம் விழியோரத்துக் கண்ணீருக்கும், கைதட்டல்களுக்கும் முழுச் சொந்தக்காரியாகிறார் சீஸர் விருது வென்ற சபூ ப்ரெய்ட்மன். மகன் தொலைந்து இருபது நாட்களாகியும் சேதி தெரியாத நிலையில், ஷப்பாத் அன்று காவல் துறையை வீட்டுக்குள்ளிருந்து துரத்தும் கணத்தில் கண்ணில் தெரியும் ஆவேசம், கணவனுடன் மன்றாடும்போது அதே கண்ணில் கெஞ்சல், ஃபோஃபானாவை கையருகில் நழுவவிட்டதும் டெல்கூரிடம் காட்டும் அலட்சியம் என்று தூள் பரத்தியிருக்கிறார்.


நிஜ வாழ்வில் நடக்கும் பலவும், கதைகளைவிட விசித்திரமானது என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். வாய்ப்பும் நேரமும் கிடைத்தால், நிச்சயம் பாருங்கள்.


குறிப்பு:

ஷப்பாத்: யூத மரபின்படி ( ஹலக்கா) - வெள்ளியன்று சூரிய அஸ்தமனத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் தொடங்கி, சனியன்று மாலை வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரை ஷப்பாத் கடைபிடிக்கப்படுகிறது. யூத நம்பிக்கையின்படி உலகையும் உயிர்களையும் ஆறு நாட்களில் தோற்றுவித்த இறைவன், ஏழாம் நாள் எடுத்த ஓய்வின் குறியீடாக ஷப்பாத்தை பார்க்கின்றனர். ஷப்பாத்தின் போது வேறு வேலைகளில் ஈடுபடாமல் ஆன்மீக விஷயங்களிலும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் பயன்படுத்துகின்றனர்.


- சகி











Monday, December 28, 2015

ஓநாய்களுடன் தனியே

Nackt unter Wölfen  ( Naked Among Wolves)


ஹோலோகாஸ்ட்( Holocaust) .  இவ்வார்த்தையைக் கேட்டாலே உங்கள் உடம்பில் ரத்தம் உறையும் அதிர்ச்சி ஏற்படவில்லையென்றால், நீங்கள் கீழ்வரும் படங்களைப் பார்த்திருக்க நியாயமில்லை. 

(1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் ( Schindler's List)
(2) தி பியானிஸ்ட் ( The Pianist)
(3) லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் ( Life is Beautiful)
(4) தி பாய் இன் தி ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் ( The Boy in the Striped Pyjamas)
(5) தி க்ரே சோன் ( The Grey Zone)

ஹோலோகாஸ்ட் பற்றிய சிறுகுறிப்பு
  1941 முதல் 1945 வரையிலான ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் ஹிட்லரின் நாஜி படைகளால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.  இதற்கு அப்பாலும் - கம்யூனிஸ்டுகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் , வயது முதிர்ந்தவர்- என்ற வரிசையில் ஒரு 50 லட்சம் கூட்டிக்கொள்ளவும்.  ரயில்களில் கூட்டம் கூட்டமாக ஏற்றிச் சென்று, சித்ரவதை முகாம்களிலும் மரண முகாம்களிலும் அடைத்து,
உயிர் பிரியும் வரையில் வேலைகள் பிழிந்து, சொற்ப உணவளித்து, சதையெல்லாம் ஒட்டி எலும்புகள் புடைத்துக்கொண்டு, சாவை கண்களில் தேக்கித் திரியும் ஜீவன்களாய் மாற்றி, நினைத்த நேரத்திற்கெல்லாம், நினைத்த காரணத்துக்கெல்லாம் சுட்டுத் தள்ளி ஒரு இனத்தை நாஜிக்கள் ஆடிய மரண வேட்டையே ஹோலோகாஸ்ட்.

அடைத்து வைக்கப்பட்ட மக்களில், தங்களுக்கு விசுவாசமானவர்களையும் உடல் வலிமையுள்ளவர்களையும், காபோக்களாக ( Kapo) தெரிவு செய்து, அவர்களைக் கண்காணிக்க வைத்தனர். சற்றே தரமான உடையும் உணவும் மற்ற சௌகர்யங்களும் கிடைத்தாலும், தங்களினத்தவரையே நாளுக்கு நாள் சித்ரவதை செய்யும் ஒரு கொடூரமான வாழ்க்கை அவர்களுக்கு.

மனதைப் பிழியும் இந்தப் பின்னணியில் வரும் எந்தப் படத்தைப் பார்ப்பதற்கும் மனோதைரியமும் புரிதலும் மிக முக்கியம்.  அதில் நேர்ந்த ரத்தத்தையும் கோரத்தையும் காட்டாமலேயே நெகிழ வைத்த - லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்- தனித்துவம் வாய்ந்தது. ஆனால் 
ஹோலோகாஸ்ட் பற்றிய புரிதலில்லாமல் அந்த நெகிழ்வை உணர்தல் அரிது, 


நேகட் அமங் உல்வ்ஸ்
இவ்வரிசையில் வந்திருக்கும் ஒரு தரமான படைப்பாக - நேகட் அமங் உல்வ்ஸ் ( Naked Among Wolves) - 2015ல் வெளிவந்திருக்கும் ஜெர்மானிய மொழித் திரைப்படம்.  1958-ல் இதே பெயரில் வெளிவந்த ப்ரூனோ அபிட்ஸின் நாவலைத் தழுவி ஃபிலிப் காடெல்பாக் இயக்கி இருக்கிறார். 1963-ல் இதே பெயரில் ஒரு படம் வெளிவந்திருக்கிறது. 


இரண்டாம் உலகப் போரின்போது, 1944 மற்றும் 1945 ஆண்டுகளில் புசென்வால்டு முகாமில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் நகர்கிறது கதை. தன்னுடைய கம்யூனிச நடவடிக்கைகளினால், புசன்வால்டுக்கள்  தன் தந்தையுடன்  அடைக்கப்படுகிறான் ஜெர்மானியனான பிப்பிக். 

 அங்கு கொண்டுவரப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளில், போலந்தைச் சேர்ந்த ஒரு யூதன் ஒரு பெட்டியைக் கொண்டுவருகிறான்.  மேற்பார்வை செய்யும் காபோ எவ்வளவு சொல்லியும், பெட்டியைப் பிரிய மனமில்லை அவனுக்கு. வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து, அப்பெட்டியை உள்ளே எடுத்துச் செல்லும் பிப்பிக், பிரித்துப் பார்க்கையில், உள்ளே மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.  கணக்கில் பதிவு செய்யப்படாத, ஜெர்மானிய மொழி பேசாத அந்தச் சிறுவனை ஒளித்து வைக்கிறான். தன் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பகிர்கிறான். 

அங்குள்ள கம்யூனிஸ்டுகள், ஜெர்மானிய S.S படையைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்.  அத்திட்டம் நிறைவேறும் வரையில் அவர்களுக்குப் பணிந்து போவது போன்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் அக்குழந்தையைப் பதுக்கி வைப்பது அவர்கள் திட்டத்துக்கே சேதமாக முடியுமென்பதனால் சற்று யோசிக்கிறார்கள். ஆனது ஆகட்டுமென்று காப்பாற்ற முடிவு செய்கிறார்கள். 

(1) எப்படியாவது அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தீர்த்துக் கட்டத் துடிக்கும் S.S அதிகாரிகள்
(2) தனது ஆயுதப் போரட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் கம்யூனிஸ்ட் காபோக்கள்
(3) யார் கண்ணிலும் படாமல் குழந்தையைக் காப்பாற்றத் துடிக்கும் பிப்பிக் மற்றும் அவன் சகாக்கள்
(4) தன் தந்தையின் உயிர்கொல்லி நிலைமைக்கு ( Gangrene) மருந்து வாங்குவதற்காய் எதையும் காட்டிக் கொடுக்கும் நிலைமையில் ஒருவன்

இன்னும் பல கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் Cat and Mouse Game தான் இந்தத் திரைப்படம்.

 குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படம் உகந்ததல்ல. 


நெகிழவும் உறையவும் வைக்கும் பல காட்சிகள் படமெங்கும். 

(1) நாள் முழுக்க வேலை செய்துவிட்டு புறாக்கூண்டுப் படுக்கையறையில் படுத்திருக்கும் அவன் பக்கத்து ஆள், தன் வாயில் ஒளித்து வைத்திருக்கும் பழத்துண்டை எடுக்கிறான். எச்சிலூறிய அத்துண்டில் இவனுக்குப் பங்கு வேண்டுமாவென்று கேட்கிறான்.  வேண்டாமென்ற இவன் பதிலை பொருட்படுத்தாமல், சாப்பிடுபவர்களைப் பற்றிய தத்துவமொன்று உதிர்க்கிறான்.

(2)  மொழி புரியாத குழந்தை அவர்களின் வாக்குவாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பேச்சினூடே அவர்கள் S.S என்று கூற, மின்னலென பெட்டிக்குள் மறைந்து மூடிக்கொள்கிறது.

(3) பெட்டிக்குள் உறங்கும் குழந்தையின் வடிவம்கண்டு தன் கர்ப்பிணி மனைவியை நினைவுகூறும் பிப்பிக்.

(4) தன் கையில் குழந்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு கதைசொல்லியபடியே கூட்டத்துடன் முகாமை விட்டுச்  செல்கிறான் அக்கிழவன்.  பதிலேதும் கிடைக்காததால், சந்தேகத்துடன் திறந்துபார்க்க,  கம்பளியும் சட்டைகளும் கீழேவிழ, அக்கணமே உயிர்போய்விட்ட உணர்வில் அவன் நிற்க, சாத்திரத்துக்காய் ஒரு காவலாளி அவனைச் சுட்டுத்தள்ள, மெல்லிய குரலில் ஒரு தாலாட்டு - உள்ளே ஒரு காபோ அக்குழந்தைக்காய் பாடிக்கொண்டிருக்க, நிறைகிறது ஒரு காட்சி.

(5)  குழந்தைக்குப் பால் கொண்டு வருகிறான் பிப்பிக். அவன் சகா அது எங்கிருந்து வந்தது எனக்கேட்க- ’மூ மூ ’ என மாடு போல் கத்திக் காண்பிக்கிறான். அச்சத்தம் கேட்டதும் குழந்தை திடீரென சிரிக்க ஆரம்பிக்கிறது.  படத்தின் பாதியில் வரும் இக்காட்சியில்தான் புன்னகை என்ற ஒன்றை , முக்கால் மணி நேரத்தில் எந்த முகத்திலும் நாம் பார்க்கவில்லை என்ற ‘பளார்’ தருணம்.

(6) சுரங்கத்துக்குள் காத்துக்கொண்டிருக்கும் பிப்பிக், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். ஒரு இடத்தில் குழந்தையை ஒளித்துவைத்துவிட்டு, உணவு தேடிச் செல்கிறான். திரும்ப வந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. வெளிச்சத்தின் விளிம்பில் அந்தக் குழந்தை நின்று கொண்டிருக்கிறது. அதன் முன்னே, அவனை விட பெரியதாய் ஒரு வேட்டை நாய்........திக் திக் தருணங்கள். 


  ஒரு யூதக் குழந்தையை மையமாகக் கொண்டாலும், கம்யூனிசப் பார்வையில் கதை படைப்பு.
ஒரு சாரார் எல்லோருமே நல்லவர்களாகவும், பாசமும் ஈரமும் நிறைந்தவர்களாகவும். கொள்கைப் போரளிகளாகவுமான காட்சிப் படைப்புகள் ஒரு சார்புடைய நிலைமையைக் காட்டுகிறது. (மூலக் கதைக் கருவிலிருந்து பிசகாமல் இருக்கிறது. )

பிப்பிக்காக ஃப்ளோரியன் ஸ்டெட்டெரும், ஹோஃபலாக பீட்டர் ஷ்ணைடரும் - அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.


ஹோலோகாஸ்ட்டைப் பற்றி நீங்கள் பார்க்கும் முதல் படம் இதுவெனில், நான் மேலே குறிப்பிட்ட 5 திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.



சந்திப்போம், அடுத்த சினிமாவுடன்.


- சகி


குறிப்புகள் - 

நாஜி - ( Nazi) - ஆங்கில உச்சரிப்பு ‘ நா-ட்-ஸீ’)  - National Socialist German Workers' Party-ன் சுருக்கம். 1920 - 1945 வரை ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையில் இயங்கிய அரசியல் கட்சி.

S.S - (Schutzstaffel) - நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டு, லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற தனிப்படை. உலகப் போரில் ஜெர்மனி வீழ்த்தப்பட்ட பின், சர்வதேச இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு குற்ற அமைப்பாக அறிவிக்கப்பட்டது. போரின் உச்சத்தில், 1 லட்சம் பேர் கொண்ட அமைப்பாக இருந்தது.


Friday, December 25, 2015

’எல்லி’யில்லாப் பயணம்


சில சினிமாக்கள் மொழிகளைத் தாண்டி நம்மை ஈர்க்கும்.  இன்னும் சிலவற்றில் சினிமாவே ஒரு மொழியாய் மாறி நம்முடன் உரையாடும்.  Netflix புண்ணியத்தில்  - எல்லியைப் பற்றி ( About Elly)  நான் சமீபத்தில் பார்த்து ரசித்த பிரமித்த, இரண்டாம் வகை படம். 

 இரானிய இயக்குனர்  அஸ்கர் ஃபர்ஹாதி யின் நான்காவது படம்.  நாற்பதின் முதிர்ச்சி தெரிகிறது.
2009-ல் வெளியீடு.






(1) நடுத்தர மக்களின் மனப்போரட்டம் (2) உளவியல் த்ரில்லர்  (3) உண்மைக்கும் பொய்க்குமான தத்துவார்த்த தர்க்கம்  என மூன்று தளங்களில் பயணிக்கிறது. நம்மையும் அறியாமல் மூன்றும் சங்கமிக்கும் நேரத்தில் நமக்குள்ளே கேள்விகள் எழுகின்றன.   பொய்க்கு இருக்கும் வலிமை உண்மைக்கும் இருக்கிறதா?  புரைதீர்ந்த நன்மை பயக்குதற்காக சில நேரங்களில் சொல்லப்படும் பொய்கள், நேர நீட்சியில் பயன்  நீர்த்து, வெறும் பொய்யாய்த் தெரிந்திடுமா?

மூன்று நடுத்தர தம்பதிகள், வார விடுமுறைக்காய் ஒரு கடற்கரையோர பங்களாவிற்குச் செல்கின்றனர்  - 1) ஆமிர், மனைவி செப்பிடே, குழந்தை   2) பேய்மன், மனைவி ஷோரே, இரண்டு குழந்தைகள்  3) மனுசேர், மனைவி நாசி. இவர்களுடன் ஜெர்மனியிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அஹ்மத் விவாகரத்தானவன். இந்தக் குழுவின் நாடியாய், துடிப்புடன் செயல்படுபவள் செப்பிடே. அவள்தான் இந்த விடுமுறைக்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்கிறாள்.

அஹ்மதிற்குத் துணைசேர்ப்பதற்காகத் தன் குழந்தையின் பள்ளி ஆசிரியையான எல்லியையும் கூட அழைத்து வருகிறாள் செப்பிடே. முழுதாக விருப்பமில்லாமலும், சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகவும், தயக்கத்துடனே வருகிறாள் எல்லி. 

அவர்கள் தங்குவதாக இருந்த பங்களா கடைசி நொடியில் கிடைக்காமல் போகிறது. வேறு வழியின்றி, வந்திருப்பது திருமணமான புது தம்பதி யென்றும், இதுவே அவர்கள் வெளியே செல்லும் முதல் முறையென்றும் பொய் சொல்கிறாள் செப்பிடே. இரானிய சமூகத்தில் மணமாகாத பெண்கள் குறித்த பார்வை நம்மூரை நினைவுபடுத்துகிறது.  

கடல் பார்த்த ஒரு பழைய பங்களா கிடைக்கிறது. அழுக்கான இடம், கதவுகளோ, ஜன்னல்களோ சரியில்லை. வேறு வழியின்றி தங்குகிறார்கள். சரியாக மூடமுடியாத கதவுகளால், அலைகளின் ஓசையே இசையாய் படம் நெடுக.   நண்பர்கள் இணைந்து ஆட்டமும், விளையாட்டுமாய் பொழுது கழிகிறது. புதுத் தம்பதிக்காய் மெத்தைகள் எடுத்து வரும் வீட்டம்மா, எல்லியையும், அஹ்மதையும் பார்த்து பாட்டொன்று பாட, என்ன செய்வதென்று தெரியாத எல்லியின் திகைப்பும், அஹ்மதின் குறும்புப் பார்வையும் அழகு. 

மறுநாள் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகும் எல்லியை, தடுக்கிறாள் செப்பிடே. வற்புறுத்தி தங்கச் சொல்லிவிட்டு கறிகாய் வாங்க கடைக்கு ஷோரேவைக் கூட்டிக்கொண்டு போகிறாள். ஆடவரெல்லாம் வாலிபால் ஆடிக்கொண்டிருக்க, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்வேலை பார்க்கச் செல்கிறாள் நாசி.

பேய்மனின் மகன் ஆரஷ் கடலில் மாட்டிக்கொள்ள, படம் வேறு வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. பெரும் பதைபதைப்புக்குப் பின்னர், குழந்தையைக் காப்பாற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டால் - எல்லியைக் காணவில்லை.  எல்லி என்ன ஆனாள்? இந்நிகழ்வால் அக்குடும்பங்கள் படும் மனக்கிலேசங்கள், பொய்க்கும் உண்மைக்குமான தத்துவார்த்த வாதங்கள் என பிரயாணிக்கிறது. முதல் பாதி சொகுசு காரிலும், இரண்டாம் பாதி நாஸ்காரிலும் !!!
கதைசொல்லி உங்கள் அனுபவத்தில் மண்ணள்ளிப் போட விரும்பவில்லை. 

பின்னணி இசையே இல்லை.  இயற்கையின் இசையே படம் முழுதும்.  மனத்தின் ஒசைகளும் சேர்ந்துகொள்ள, கடல் இசைக்கிறது - சிம்பிளாய் ஒரு சிம்பொனி.

அனைவருமே நடிப்பில் பின்னியெடுத்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்ல - செப்பிடேவாக -’ கோல்ஷிஃப்டே ஃபராஹானி - ஆரம்பத்தில் பூரிப்பும்,  நடுவே குழப்பமும், பின்னிறுதியில் பதைபதைப்பும் - பிரமிப்பு.

அஹமதாக - ஷஹாப் ஹொஸ்ஸெய்னி - வட இந்திய ஸ்டார் நடிகர் போன்று இருக்கிறார். ஆனால் என்ன - நடிக்கிறார். நெகிழ வைக்கிறார். கதை நடக்கின்ற வீட்டுக்குள்ளும் வெளியேயும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டதைப் போன்று, உறுத்தாத ஒளிப்பதிவு - ஹொஸெய்ன் ஜஃபாரியான்.

மொத்தத்தில் - கண்டிப்பாய் பார்க்க வேண்டிய - முடிந்தால் நமக்கென்று ஒரு  DVD ( ஒரிஜினல் தாங்க..) வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய படைப்பு.

ஸார் - நீங்க என்ன இரானியன், இத்தாலியன் படம்தான் பாப்பீங்களோ! அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என்ற கேள்வி பின்னாலிருந்து.

இல்ல சார். ஒரு மாசத்துக்கு முன்னாடி ‘புலி’யும், ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘வேதாளமும்’ பார்த்தேன்.  இன்னும் அதுலேந்து மீளலை. நம்ம கடைல எல்லாம் ஓடும்.  என்ன .... என்னைக்காவது ஒரு நாள் தமிழ்லயும் நல்ல படம் வராமலா போகும். 

அடுத்த படைப்புடன் சந்திப்போம்.

-சகி