சில சினிமாக்கள் மொழிகளைத் தாண்டி நம்மை ஈர்க்கும். இன்னும் சிலவற்றில் சினிமாவே ஒரு மொழியாய் மாறி நம்முடன் உரையாடும். Netflix புண்ணியத்தில் - எல்லியைப் பற்றி ( About Elly) நான் சமீபத்தில் பார்த்து
இரானிய இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதி யின் நான்காவது படம். நாற்பதின் முதிர்ச்சி தெரிகிறது.
2009-ல் வெளியீடு.
(1) நடுத்தர மக்களின் மனப்போரட்டம் (2) உளவியல் த்ரில்லர் (3) உண்மைக்கும் பொய்க்குமான தத்துவார்த்த தர்க்கம் என மூன்று தளங்களில் பயணிக்கிறது. நம்மையும் அறியாமல் மூன்றும் சங்கமிக்கும் நேரத்தில் நமக்குள்ளே கேள்விகள் எழுகின்றன. பொய்க்கு இருக்கும் வலிமை உண்மைக்கும் இருக்கிறதா? புரைதீர்ந்த நன்மை பயக்குதற்காக சில நேரங்களில் சொல்லப்படும் பொய்கள், நேர நீட்சியில் பயன் நீர்த்து, வெறும் பொய்யாய்த் தெரிந்திடுமா?
மூன்று நடுத்தர தம்பதிகள், வார விடுமுறைக்காய் ஒரு கடற்கரையோர பங்களாவிற்குச் செல்கின்றனர் - 1) ஆமிர், மனைவி செப்பிடே, குழந்தை 2) பேய்மன், மனைவி ஷோரே, இரண்டு குழந்தைகள் 3) மனுசேர், மனைவி நாசி. இவர்களுடன் ஜெர்மனியிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அஹ்மத் விவாகரத்தானவன். இந்தக் குழுவின் நாடியாய், துடிப்புடன் செயல்படுபவள் செப்பிடே. அவள்தான் இந்த விடுமுறைக்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்கிறாள்.
அஹ்மதிற்குத் துணைசேர்ப்பதற்காகத் தன் குழந்தையின் பள்ளி ஆசிரியையான எல்லியையும் கூட அழைத்து வருகிறாள் செப்பிடே. முழுதாக விருப்பமில்லாமலும், சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகவும், தயக்கத்துடனே வருகிறாள் எல்லி.
அவர்கள் தங்குவதாக இருந்த பங்களா கடைசி நொடியில் கிடைக்காமல் போகிறது. வேறு வழியின்றி, வந்திருப்பது திருமணமான புது தம்பதி யென்றும், இதுவே அவர்கள் வெளியே செல்லும் முதல் முறையென்றும் பொய் சொல்கிறாள் செப்பிடே. இரானிய சமூகத்தில் மணமாகாத பெண்கள் குறித்த பார்வை நம்மூரை நினைவுபடுத்துகிறது.
கடல் பார்த்த ஒரு பழைய பங்களா கிடைக்கிறது. அழுக்கான இடம், கதவுகளோ, ஜன்னல்களோ சரியில்லை. வேறு வழியின்றி தங்குகிறார்கள். சரியாக மூடமுடியாத கதவுகளால், அலைகளின் ஓசையே இசையாய் படம் நெடுக. நண்பர்கள் இணைந்து ஆட்டமும், விளையாட்டுமாய் பொழுது கழிகிறது. புதுத் தம்பதிக்காய் மெத்தைகள் எடுத்து வரும் வீட்டம்மா, எல்லியையும், அஹ்மதையும் பார்த்து பாட்டொன்று பாட, என்ன செய்வதென்று தெரியாத எல்லியின் திகைப்பும், அஹ்மதின் குறும்புப் பார்வையும் அழகு.
மறுநாள் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகும் எல்லியை, தடுக்கிறாள் செப்பிடே. வற்புறுத்தி தங்கச் சொல்லிவிட்டு கறிகாய் வாங்க கடைக்கு ஷோரேவைக் கூட்டிக்கொண்டு போகிறாள். ஆடவரெல்லாம் வாலிபால் ஆடிக்கொண்டிருக்க, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்வேலை பார்க்கச் செல்கிறாள் நாசி.
பேய்மனின் மகன் ஆரஷ் கடலில் மாட்டிக்கொள்ள, படம் வேறு வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. பெரும் பதைபதைப்புக்குப் பின்னர், குழந்தையைக் காப்பாற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டால் - எல்லியைக் காணவில்லை. எல்லி என்ன ஆனாள்? இந்நிகழ்வால் அக்குடும்பங்கள் படும் மனக்கிலேசங்கள், பொய்க்கும் உண்மைக்குமான தத்துவார்த்த வாதங்கள் என பிரயாணிக்கிறது. முதல் பாதி சொகுசு காரிலும், இரண்டாம் பாதி நாஸ்காரிலும் !!!
கதைசொல்லி உங்கள் அனுபவத்தில் மண்ணள்ளிப் போட விரும்பவில்லை.
பின்னணி இசையே இல்லை. இயற்கையின் இசையே படம் முழுதும். மனத்தின் ஒசைகளும் சேர்ந்துகொள்ள, கடல் இசைக்கிறது - சிம்பிளாய் ஒரு சிம்பொனி.
அனைவருமே நடிப்பில் பின்னியெடுத்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்ல - செப்பிடேவாக -’ கோல்ஷிஃப்டே ஃபராஹானி - ஆரம்பத்தில் பூரிப்பும், நடுவே குழப்பமும், பின்னிறுதியில் பதைபதைப்பும் - பிரமிப்பு.
அஹமதாக - ஷஹாப் ஹொஸ்ஸெய்னி - வட இந்திய ஸ்டார் நடிகர் போன்று இருக்கிறார். ஆனால் என்ன - நடிக்கிறார். நெகிழ வைக்கிறார். கதை நடக்கின்ற வீட்டுக்குள்ளும் வெளியேயும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டதைப் போன்று, உறுத்தாத ஒளிப்பதிவு - ஹொஸெய்ன் ஜஃபாரியான்.
மொத்தத்தில் - கண்டிப்பாய் பார்க்க வேண்டிய - முடிந்தால் நமக்கென்று ஒரு DVD ( ஒரிஜினல் தாங்க..) வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய படைப்பு.
ஸார் - நீங்க என்ன இரானியன், இத்தாலியன் படம்தான் பாப்பீங்களோ! அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என்ற கேள்வி பின்னாலிருந்து.
இல்ல சார். ஒரு மாசத்துக்கு முன்னாடி ‘புலி’யும், ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘வேதாளமும்’ பார்த்தேன். இன்னும் அதுலேந்து மீளலை. நம்ம கடைல எல்லாம் ஓடும். என்ன .... என்னைக்காவது ஒரு நாள் தமிழ்லயும் நல்ல படம் வராமலா போகும்.
அடுத்த படைப்புடன் சந்திப்போம்.
-சகி
Loved the movie. Will discuss the ending with you offline. Brilliant in all aspects. What impressed me was the acting skills and the cinematography. Simple yet powerful.
ReplyDelete