Saturday, December 19, 2015

அண்ணாமலை - பாகம் 3


வாய்பிளந்த பெருவண்டி வீடிடித்தது

உலகுண்ட  உத்தமன்போல்-  அதன்
வாயெல்லாம்  மண்ணும்  கல்லும்

தாயும்  தன்னவளும்  திருவிழா  சென்றிருக்க
வாயும்  கண்ணுமே  அவனிடத்தில் அவலம்சொல்ல

பயிர்  செய்ய  உழுதற்குமில்லை
 மயிர்நீத்து  தொழுதற்குமில்லை
  உயிர்காத்து  விழுதற்குமில்லை-  மழை
    அவனொடு  அழுதற்காய்ப்  பெய்தது
     அவன்  நெஞ்சு  எழுதற்காய்ப்  பெய்தது

நஞ்சுகுடித்தவன்  போல்  துடித்தான்
நஞ்சுகொடுத்தவன்பால்  வெடித்தான்

அவன்  வீடு  நோக்கி  நடந்தான்
பண  விலங்குறங்கும்
காடு  நோக்கி  நடந்தான்

இவன்  வரவுகண்டு  -  வீட்டின்  கதவுகூட  மிரண்டது
சாவியோ  முயற்சியோயின்றித்  தானாகவே திறந்தது




கர்ஜித்தான்...



"அடேய்......



  நீ  இன்று  என்  வீட்டை  இடிக்கவில்லை
  நட்பெனும்  கூட்டை  இடித்தாய்
  தன்மகன்  முன்னிலும்  பின்னிலும்  உன்னையே
  'என்மகன்'  என்றவள்  பாட்டை  இடித்தாய்
  உன்நகம்  ஓர்திரி  வெளியே  வளர்ந்தாலும்
  தன்னகம்  குதித்து  மின்னலென  வெட்டிடும்
  தங்கையவள்  மனக்கோட்டை  இடித்தாய்

  காசில்லை  என்பதனால்  தூசாகிப்போனேனோ?
   தனகனமில்லை  யென்பதனால்  லேசாகிப்போனேனோ?

  இன்றே  எழுதிக்கொள்....

     சில்லறையை  விட்டெறிந்து  வீட்டைத்  தகர்த்தவன்  நீ
      உன்  கல்லறை  வாசகத்தைத்  திருத்தச்சொல்...

     வீடிழந்து,  வாழ்விழந்து,  மனமிழந்து  நிற்கும் நான்
      வீழ்ந்து  போகமாட்டேன்  ;
       உன்னில்  தாழ்ந்து  போகமாட்டேன்

உன்  கர்வம்  கொல்வேன்;
      உனை  நின்று  வெல்வேன்

எனை  நண்பனாய்ப்  பார்த்தாய்;
          நற்பண்பனாய்ப்  பார்த்தாய்
      உனை  எதிர்க்கும்  புயலாய்ப்  பார்த்ததில்லை...

உன்னிலும்  பெரிதாய்....  மண்ணிலே  அரிதாய்
வையமே  போற்றும்  வணிகனாய்
வானமும்  போற்றும்  தலைவனாய்  மாறி...

உன்வசமுள்ள  அனைத்தும்  அழிப்பேன்
அதுவரை  எப்போதும்  விழிப்பேன்....விழித்தே கிடப்பேன்

     நீ  பலமிழந்து,  பணமிழந்து,  வளமிழந்து
      தரையில்  வீழ்ந்து
      மதியிழக்கும்  காலமும்  வரும்  -  உன்
      கதியிழக்கும்  நேரமும்  வரும்...

          இந்த  நாள்...உன்  ஏட்டில்  குறித்துக்கொள்

     இன்று....    இப்பொழுது...   இக்கணமே
      மாறப்போகிறதுன்  இலக்கணமே...

                                         தொடரும்.....

- சகி


No comments:

Post a Comment