Wednesday, December 23, 2015

தீயில் கருகாத தாள்கள்




வீட்டுக்குள் அமர்ந்திருந்தேன்
வெளியெல்லாம் பனி
உள்ளெல்லாம் நெருப்பு.

வெறுமையில் நான்,
இரண்டு நாற்காலிகள்
60 புத்தகங்கள்,
எல்லாம் தனிக்கதைகள்.
பாதி முடிந்த பாட்டில்,
எரியட்டுமா வேண்டாமா வென்ற
கேள்வியுடன் அரைநூற்றாண்டுக் கணப்படுப்பு.

நீரில் எடை குறையத்தானே செய்யும்?
அறிவியலுக்கு அறிவில்லையா?
கண்ணீரில் எடை கூடத்தான் செய்தது.

கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன்
ஒரு காதல் கதை.
வீடுமட்டுமல்ல, ஊரையே எதிர்த்து
கோடுதாண்டி கோவில்சென்று
தாலிகட்டி
முடிக்காத கோடிவீட்டு மாடியொன்றில்
குடியேறி, காதல் சமைத்து,
 வியர்வையில் தாளித்துத்
தாமே உணவாய் ஆன கதை

பிடிக்காத பக்கங்களைக்
கிழிக்கத் தொடங்கினேன்
எரியிலிட்டு
அழிக்கத் தொடங்கினேன்

சோதியாய் எரிந்தது
ஆனால் காகிதம் விரிந்தது
எழுத்துக்கள் பெரிதாயின
என்னைப் பார்த்துச் சிரித்தன

வேறொரு புத்தகமெடுத்தேன்
ஆணொன்றும் பெண்ணொன்றுமாய்க்
காதலின் விளைவுகள்,
வாழ்வின் வளைவுகள்
சொல்லும் பக்கங்களை
அறவே வெறுத்தேன்
கையாலறுத்தேன்
தீயிலிட்டேன்.

அவையும் அங்ஙனமே.


மூன்றாவதாய் ஒரு புத்தகம்
மக்களெல்லாம்
திசைக்கொருவராய்ச் சென்றபின்பு
எண்திசையும்
அவளேயென அவனும்
அவனேயென அவளும்
வாழ்வின் சித்தரிப்பு.
கணநேரம் தாங்கவில்லையெனக்கு.
கிழித்தெரிந்தேன்.

கனலில் விஸ்வரூபமெடுத்தன
தாள்கள்.

ஆச்சரியத்திலாழ்ந்த எனக்கு
எதுவும் புரியவில்லை

அறுபது புத்தகங்களும்
என்னைச் சூழ்ந்தன
என் அறையைச் சின்னதாய் ஆக்கின

புத்தகச் சுவர்களாலான அறைக்குள்
அடக்கமானேன்
அப்புத்தகங்களினூடே ஒரு
வார்த்தையாய்த்
தொலைந்து போனேன்.


-சகி




No comments:

Post a Comment