Thursday, August 25, 2016

தைரியம்


தெரியாத சேதிகள் ஆயிரம் இருந்தும், நம் கண்ணைத் தராசாக்கி, கடிவாளப் பார்வைகொண்டு நாமே திடீர் நீதிபதிகளாகிறோம். நியாயங்கள் வழங்குகிறோம்.
சட்டையின் கிழிசல்களை வைத்து அடையாளங்கள் தைக்கிறோம்.
ஒட்டியுள்ள அழுக்கை வைத்து வரிசையில் நிற்க வைக்கிறோம்.

பெயரில் மட்டுமே செல்வத்தைக் கொண்டவனுக்கும், போலித் தெளிவு கொண்டவளுக்குமான ஒரு நிகழ்வே இப்பதிவு.





செம்மண் படிந்த தலையும்
செம்புக் கையணியும்
செருப்பில்லாக் காலும்
செல்வத்தின் அடையாளம்

தலைகுனிந்து நின்றான் செல்வம்
தவிர்க்கமுடியாமல்.
தளும்பிய கண்கள்
தடயம் காட்டின.

"எடுத்தியா இல்லையா?"
"எவ்வளவு தெரியுமா?"
"எங்கடா உங்க அப்பன்?"
எத்தனை கேள்விகள்
எதற்குமே விடையில்லை
எவரிடத்தும்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்

அகோரப் பசிபோல் வெட்கம்
அடங்காமல் பிடுங்கித் தின்ன
அடிபட்ட நாயாய் விம்மி
அப்படியே ஓடிப்போனான்

........................

வேகமாய் நடந்தாள்
வேர்வையின் துளிகள்
வேடிக்கை பார்க்க
வேகமாய் நடந்தாள்

இல்லாத நிலவு
இருட்டைப் பாய்ச்ச
இல்லாத நிழல்கள்
இருப்பதாய்ப் பயந்தாள்

தெருமுக்கில் கடையொன்று..
தெரிந்த கடைதான்..
தெரியத் தெரிய
தெம்பு பிறந்தது

சிகரெட்டுப் புகை சூழ
சினிமாக்கதை பேசி
சிரித்த குரல்கள்...
சிக்கனமாய் நடந்தாள்

கடைக் கண்களே
கடைசிக் கண்களாய்
கருத்தை உண்ணக்
கடகடத்தாள்....

கண்களும் முன்னே பார்க்கக்
கற்பனை பின்னே பாய
கறுப்பு வெளிச்சத்தில்
கரம்பட...... திகைத்தாள்

"கையைப் பிடிச்சிக்கோங்கக்கா"
 மையிருட்டில் ஒளிர்ந்தான் செல்வம்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்


- சகி

No comments:

Post a Comment