Tuesday, December 22, 2015

அவனுக்கு இரைச்சல் பிடிக்கவில்லை



ஒரே இரைச்சல்!!!
பாலுவுக்கு எரிச்சலாயிருந்தது..
ரயில்வே ஸ்டேஷனருகே அவர்களது வீடு.
கூட்டத்துக்கும், சத்ததுடன் வரும்
ஆட்டத்துக்கும் பஞ்சமில்லை.

பழுப்பேரிய அறைச்சுவரில் மாட்டிய
ஓரத்தில் கிழிந்த காலண்டரில்
கிரிக்கெட் மாட்ச் தேதிகளும்
பால், மளிகை கணிதங்களும்.

ஒற்றை அறை வீட்டில் ஆறுபேர் வாசம்.
கடைக்குப் போவதுமுதல்
கக்கூஸுக்குப் போவது வரை
நீயா-நானா சண்டை.

இவர்களுக்கெல்லாம் காதே கேட்காதா?
அவ்வப்போது வியப்பான்.
எதிரேயிருந்த மைதான ஓரத்தில்
போனால் போகிறதென்று விட்டுவைத்த
கொய்யா மரம்தான் அவன் போதிமரம்.
இரவுணவுண்டபின் பத்து நிமிடமாவது
அவன் அங்கே அமர்வான்.
கேட்டதெல்லாம்
தெருநாய் சத்தமும், அவ்வப்போது கேட்கும்
ஆட்டோ சத்தமும்.
இரைச்சல்களிலிருந்து விடுதலைபெறும்
அந்த பத்து நிமிடங்களுக்காய் மற்ற மணித்துளிகளை
அவன் வெறுமனே புரட்டினான்.

நான்கு தினங்களாய்
அவனுக்குத் தெரிந்த யாரையும் காணவில்லை.
திடீரென வெள்ளம் வந்தபோது,
கொய்யா மரத்தருகே இருந்தவன்,
மரத்திலேறி அமர்ந்துகொண்டான்.
கிரைண்டர் மாவைப்போல்
சுழித்துக் கொண்டோடியது தண்ணீர்.

‘அய்யோ!!!காப்பாத்துங்....”-
இரண்டுபேர் சுழிக்குள் தொலைந்தனர்.
கண்மலங்கப் பார்த்தான், கிளையைப் பற்றியபடி

ரெஸ்க்யூ போட்டில் வந்தவர்கள் இவனைப் பார்த்தனர்.
 இறக்கி அவனை ஒரு பள்ளிக்கூடத்தில் விட்டனர்.

ஆயிரம் பேருக்கு மேல் இருந்தனர்.
ஆனால் குரல்கள் கேட்கவில்லை.
எல்லாமே இழந்த முகங்கள்,
சோகம் இழைந்த முகங்கள்.
ஒலியேதும் கேட்கவில்லை.

மௌனத்தின் இரைச்சல், அவன் காதுகளுக்குள்.
அவனுக்கு இரைச்சல் பிடிக்கவில்லை.

- சகி



6 comments:

  1. இனம் புரியாதவையெல்லாமே
    இரைச்சலாய்த்தோன்றும்
    இயல்பாய்த்தோன்றும் எல்லாமே
    இசையாய் இனிக்கும்
    கூப்பிட்ட குரலெல்லாம்
    இரைச்சாலாய் கேட்டது
    இயற்கை சீற்றத்தாலே

    ReplyDelete
    Replies
    1. இயற்கை சீற்றம் மட்டுமல்ல மாந்தர்
      இழைத்த குற்றம் அவலம் கூட்டிற்று.

      Delete
  2. மிக அருமை கவிஞரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  3. lot of depth and pain..good one...

    ReplyDelete