Thursday, August 25, 2016

தைரியம்


தெரியாத சேதிகள் ஆயிரம் இருந்தும், நம் கண்ணைத் தராசாக்கி, கடிவாளப் பார்வைகொண்டு நாமே திடீர் நீதிபதிகளாகிறோம். நியாயங்கள் வழங்குகிறோம்.
சட்டையின் கிழிசல்களை வைத்து அடையாளங்கள் தைக்கிறோம்.
ஒட்டியுள்ள அழுக்கை வைத்து வரிசையில் நிற்க வைக்கிறோம்.

பெயரில் மட்டுமே செல்வத்தைக் கொண்டவனுக்கும், போலித் தெளிவு கொண்டவளுக்குமான ஒரு நிகழ்வே இப்பதிவு.





செம்மண் படிந்த தலையும்
செம்புக் கையணியும்
செருப்பில்லாக் காலும்
செல்வத்தின் அடையாளம்

தலைகுனிந்து நின்றான் செல்வம்
தவிர்க்கமுடியாமல்.
தளும்பிய கண்கள்
தடயம் காட்டின.

"எடுத்தியா இல்லையா?"
"எவ்வளவு தெரியுமா?"
"எங்கடா உங்க அப்பன்?"
எத்தனை கேள்விகள்
எதற்குமே விடையில்லை
எவரிடத்தும்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்

அகோரப் பசிபோல் வெட்கம்
அடங்காமல் பிடுங்கித் தின்ன
அடிபட்ட நாயாய் விம்மி
அப்படியே ஓடிப்போனான்

........................

வேகமாய் நடந்தாள்
வேர்வையின் துளிகள்
வேடிக்கை பார்க்க
வேகமாய் நடந்தாள்

இல்லாத நிலவு
இருட்டைப் பாய்ச்ச
இல்லாத நிழல்கள்
இருப்பதாய்ப் பயந்தாள்

தெருமுக்கில் கடையொன்று..
தெரிந்த கடைதான்..
தெரியத் தெரிய
தெம்பு பிறந்தது

சிகரெட்டுப் புகை சூழ
சினிமாக்கதை பேசி
சிரித்த குரல்கள்...
சிக்கனமாய் நடந்தாள்

கடைக் கண்களே
கடைசிக் கண்களாய்
கருத்தை உண்ணக்
கடகடத்தாள்....

கண்களும் முன்னே பார்க்கக்
கற்பனை பின்னே பாய
கறுப்பு வெளிச்சத்தில்
கரம்பட...... திகைத்தாள்

"கையைப் பிடிச்சிக்கோங்கக்கா"
 மையிருட்டில் ஒளிர்ந்தான் செல்வம்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்


- சகி

Sunday, August 21, 2016

ஒரு நாள் ஒரு கனவு





ரிரவு உறக்கத்தில்
முடியாத கனவதனில்
தேடி முகங்களெல்லாம்
அவனது சாயல்...

குறும்புப் பார்வையுடன்
திவீரன் குதித்தான் முன்னே
இடரையெல்லாம் போக்கும்வண்ணம்

ன்பே, ஆருயிரே யென்று
செல்லம் கொஞ்சக் கன்னம்தீண்டி
காததன் விளக்கம் சொன்னான்

க்கணமும் என் கனவாம்
ழுப்பதெல்லாம் என் நினைவாம்
சுதந்திரமாய் இருக்கவிடு! கெஞ்சினான்..
எழுந்திருந்தால் கலைந்துவிடும்
என்று உருப்படியாய் தூங்கிப்போனேன்...


-சகி

நங்கைவிரல்







வெறுந்தட்டை வெறித்துப் பார்த்தான்
ண் ணமெல்லாம் அவள்வண்ணம்
கட் டை விரலதனை மெலிதாய்ப் பிடித்திழுத்து
கவிதை க் கு மயங்குதல்போல் ஓரத்தலையாட்டியது
நேற்றைக் கா ? இன்றைக்கா ? நினைவில் இல்லை
    'எனக்கு காய் வேண்டாம் அண்ணி", சொல்லிச் சிரித்தான்



சகி

அலைகள் ஓய்வதில்லை





யன்றதைச் செய்துவிட்டு
சையாமல் படுத்திருந்தேன்
ஆடையின் எடைகூடப் பாரமாய்
உயிரின் ஓசை ரீங்காரத்துடன்
ந்து விழுந்தது வானொலியில்
வாம் கூட உண்டா இசைக்கு?
நேரமா காலமா ஏதும் தெரியாமல்
ஒரு யோகிபோல் மனங்கொண்டு
நாதத்தில் மோட்சம் காண
நான் என்னை மறந்தேபோனேன்.



சகி

கவிபதி





பட்டெனக் கோபம் கண்டிரத்தலும்
சட்டெனக் கோதுமையிட்டுச் சமைத்தலும்
கட்டிய பொழுதிலே காதலிசைத்தலும்
மட்டுமே வாய்த்ததெனக்கொரு பேதைநான்

கட்டிய வேட்டியைக் கசக்கித் துவைத்தலும்
எட்டிய திசையெலாம் கடன்சொல்லி வாங்கலும்
கிட்டிய பாக்கியம் இதுவன்றி அவன்நெஞ்சு
முட்டிய கவிதையில் எனக்கென்றும் இடமில்லை

சகி


Monday, August 8, 2016

சுட்டபுண்












சுமாரான தோசையை இட்டுக்கொண்டிருந்தேன்
வட்டமும் சதுரமுமாய் கிழிசலுடன் சிரித்தது
கட்டம்போட்ட சட்டையுடன் அவனே நினைவில்வர
குறும்புடனே கிள்ளுவதாய் கல்லிலே கைவைக்கப்
பட்டபுண்ணைத் தடவியதில் மெல்லியதாய்ச் சுகவலி

பயணம்



காலைப் பணிக்குத் தவறாமல் தாமதமாய்
நாளைக் குறைகூறி வண்டியில் அமர்ந்திருக்க
வேலைப்பளுவதுவும் வெப்பமும் தலைசூழ
நாளைக்குத் தள்ளினேன் சின்னக்குழப்பத்தை

சிவப்பு விளக்கதனை முறைத்து நிறுத்தினேன்
காவலனாலன்றிக் காமத்தாலல்ல
பக்கத்து வண்டிகளும் அங்ஙனமே நிற்க
கவனம் திருப்பினேன் தொண்ணூறு நொடிகொல்ல

குடிசைக் கடைகள் வரிசையாய்
கடைசிக் கடையில் சனம் வரிசையாய்
கவரும், கூடையும், பையேந்தி நிற்கும்
கதரும், பேண்டும் , கைலியும் பனியனும்

வேர்வை துடைத்துத் தள்ளிப் பார்த்தேன்
பார்வையில் பட்டது கூண்டுக் கோழி

கதவு திறந்து அதன் கனவு அடைக்கப்பட்டது
கால்களும் கழுத்தும் பத்திரமாய் கரங்களுக்குள்

ஓலத்தை வாய்வழியும்
உயிர்பயத்தைக் கண்வழியும்
பதைபதைப்பைக் கால்களிலும்
பரபரப்பை றெக்கையிலும்
ஒருசேரத் தெரிவித்தது

கையில் பிடித்தவனுக்கு அது ஒரு சடங்கு
சமிக்ஞைகளை அவன் சட்டைசெய்வதில்லை

கத்தியைப் பார்த்தது கோழி
கத்தியும் கதறியும் பார்த்தது
விழிவிரித்து உலகைப் பார்த்தது
கத்தி இறங்குதற்கு இருநொடிமுன்னால்
விழிகள்மூடி அமைதியானது
விதியறிந்த முனிவன்போல

பச்சை விழுந்தது...
பயணம் தொடர்ந்தது

- சகி