Nackt unter Wölfen ( Naked Among Wolves)
ஹோலோகாஸ்ட்( Holocaust) . இவ்வார்த்தையைக் கேட்டாலே உங்கள் உடம்பில் ரத்தம் உறையும் அதிர்ச்சி ஏற்படவில்லையென்றால், நீங்கள் கீழ்வரும் படங்களைப் பார்த்திருக்க நியாயமில்லை.
(1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் ( Schindler's List)
(2) தி பியானிஸ்ட் ( The Pianist)
(3) லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் ( Life is Beautiful)
(4) தி பாய் இன் தி ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் ( The Boy in the Striped Pyjamas)
(5) தி க்ரே சோன் ( The Grey Zone)
ஹோலோகாஸ்ட் பற்றிய சிறுகுறிப்பு
1941 முதல் 1945 வரையிலான ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் ஹிட்லரின் நாஜி படைகளால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அப்பாலும் - கம்யூனிஸ்டுகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் , வயது முதிர்ந்தவர்- என்ற வரிசையில் ஒரு 50 லட்சம் கூட்டிக்கொள்ளவும். ரயில்களில் கூட்டம் கூட்டமாக ஏற்றிச் சென்று, சித்ரவதை முகாம்களிலும் மரண முகாம்களிலும் அடைத்து,
உயிர் பிரியும் வரையில் வேலைகள் பிழிந்து, சொற்ப உணவளித்து, சதையெல்லாம் ஒட்டி எலும்புகள் புடைத்துக்கொண்டு, சாவை கண்களில் தேக்கித் திரியும் ஜீவன்களாய் மாற்றி, நினைத்த நேரத்திற்கெல்லாம், நினைத்த காரணத்துக்கெல்லாம் சுட்டுத் தள்ளி ஒரு இனத்தை நாஜிக்கள் ஆடிய மரண வேட்டையே ஹோலோகாஸ்ட்.
அடைத்து வைக்கப்பட்ட மக்களில், தங்களுக்கு விசுவாசமானவர்களையும் உடல் வலிமையுள்ளவர்களையும், காபோக்களாக ( Kapo) தெரிவு செய்து, அவர்களைக் கண்காணிக்க வைத்தனர். சற்றே தரமான உடையும் உணவும் மற்ற சௌகர்யங்களும் கிடைத்தாலும், தங்களினத்தவரையே நாளுக்கு நாள் சித்ரவதை செய்யும் ஒரு கொடூரமான வாழ்க்கை அவர்களுக்கு.
மனதைப் பிழியும் இந்தப் பின்னணியில் வரும் எந்தப் படத்தைப் பார்ப்பதற்கும் மனோதைரியமும் புரிதலும் மிக முக்கியம். அதில் நேர்ந்த ரத்தத்தையும் கோரத்தையும் காட்டாமலேயே நெகிழ வைத்த - லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்- தனித்துவம் வாய்ந்தது. ஆனால்
ஹோலோகாஸ்ட் பற்றிய புரிதலில்லாமல் அந்த நெகிழ்வை உணர்தல் அரிது,
நேகட் அமங் உல்வ்ஸ்
இவ்வரிசையில் வந்திருக்கும் ஒரு தரமான படைப்பாக - நேகட் அமங் உல்வ்ஸ் ( Naked Among Wolves) - 2015ல் வெளிவந்திருக்கும் ஜெர்மானிய மொழித் திரைப்படம். 1958-ல் இதே பெயரில் வெளிவந்த ப்ரூனோ அபிட்ஸின் நாவலைத் தழுவி ஃபிலிப் காடெல்பாக் இயக்கி இருக்கிறார். 1963-ல் இதே பெயரில் ஒரு படம் வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின்போது, 1944 மற்றும் 1945 ஆண்டுகளில் புசென்வால்டு முகாமில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் நகர்கிறது கதை. தன்னுடைய கம்யூனிச நடவடிக்கைகளினால், புசன்வால்டுக்கள் தன் தந்தையுடன் அடைக்கப்படுகிறான் ஜெர்மானியனான பிப்பிக்.
அங்கு கொண்டுவரப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளில், போலந்தைச் சேர்ந்த ஒரு யூதன் ஒரு பெட்டியைக் கொண்டுவருகிறான். மேற்பார்வை செய்யும் காபோ எவ்வளவு சொல்லியும், பெட்டியைப் பிரிய மனமில்லை அவனுக்கு. வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து, அப்பெட்டியை உள்ளே எடுத்துச் செல்லும் பிப்பிக், பிரித்துப் பார்க்கையில், உள்ளே மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன். கணக்கில் பதிவு செய்யப்படாத, ஜெர்மானிய மொழி பேசாத அந்தச் சிறுவனை ஒளித்து வைக்கிறான். தன் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பகிர்கிறான்.
அங்குள்ள கம்யூனிஸ்டுகள், ஜெர்மானிய S.S படையைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர். அத்திட்டம் நிறைவேறும் வரையில் அவர்களுக்குப் பணிந்து போவது போன்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் அக்குழந்தையைப் பதுக்கி வைப்பது அவர்கள் திட்டத்துக்கே சேதமாக முடியுமென்பதனால் சற்று யோசிக்கிறார்கள். ஆனது ஆகட்டுமென்று காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.
(1) எப்படியாவது அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தீர்த்துக் கட்டத் துடிக்கும் S.S அதிகாரிகள்
(2) தனது ஆயுதப் போரட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் கம்யூனிஸ்ட் காபோக்கள்
(3) யார் கண்ணிலும் படாமல் குழந்தையைக் காப்பாற்றத் துடிக்கும் பிப்பிக் மற்றும் அவன் சகாக்கள்
(4) தன் தந்தையின் உயிர்கொல்லி நிலைமைக்கு ( Gangrene) மருந்து வாங்குவதற்காய் எதையும் காட்டிக் கொடுக்கும் நிலைமையில் ஒருவன்
இன்னும் பல கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் Cat and Mouse Game தான் இந்தத் திரைப்படம்.
குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படம் உகந்ததல்ல.
நெகிழவும் உறையவும் வைக்கும் பல காட்சிகள் படமெங்கும்.
(1) நாள் முழுக்க வேலை செய்துவிட்டு புறாக்கூண்டுப் படுக்கையறையில் படுத்திருக்கும் அவன் பக்கத்து ஆள், தன் வாயில் ஒளித்து வைத்திருக்கும் பழத்துண்டை எடுக்கிறான். எச்சிலூறிய அத்துண்டில் இவனுக்குப் பங்கு வேண்டுமாவென்று கேட்கிறான். வேண்டாமென்ற இவன் பதிலை பொருட்படுத்தாமல், சாப்பிடுபவர்களைப் பற்றிய தத்துவமொன்று உதிர்க்கிறான்.
(2) மொழி புரியாத குழந்தை அவர்களின் வாக்குவாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பேச்சினூடே அவர்கள் S.S என்று கூற, மின்னலென பெட்டிக்குள் மறைந்து மூடிக்கொள்கிறது.
(3) பெட்டிக்குள் உறங்கும் குழந்தையின் வடிவம்கண்டு தன் கர்ப்பிணி மனைவியை நினைவுகூறும் பிப்பிக்.
(4) தன் கையில் குழந்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு கதைசொல்லியபடியே கூட்டத்துடன் முகாமை விட்டுச் செல்கிறான் அக்கிழவன். பதிலேதும் கிடைக்காததால், சந்தேகத்துடன் திறந்துபார்க்க, கம்பளியும் சட்டைகளும் கீழேவிழ, அக்கணமே உயிர்போய்விட்ட உணர்வில் அவன் நிற்க, சாத்திரத்துக்காய் ஒரு காவலாளி அவனைச் சுட்டுத்தள்ள, மெல்லிய குரலில் ஒரு தாலாட்டு - உள்ளே ஒரு காபோ அக்குழந்தைக்காய் பாடிக்கொண்டிருக்க, நிறைகிறது ஒரு காட்சி.
(5) குழந்தைக்குப் பால் கொண்டு வருகிறான் பிப்பிக். அவன் சகா அது எங்கிருந்து வந்தது எனக்கேட்க- ’மூ மூ ’ என மாடு போல் கத்திக் காண்பிக்கிறான். அச்சத்தம் கேட்டதும் குழந்தை திடீரென சிரிக்க ஆரம்பிக்கிறது. படத்தின் பாதியில் வரும் இக்காட்சியில்தான் புன்னகை என்ற ஒன்றை , முக்கால் மணி நேரத்தில் எந்த முகத்திலும் நாம் பார்க்கவில்லை என்ற ‘பளார்’ தருணம்.
(6) சுரங்கத்துக்குள் காத்துக்கொண்டிருக்கும் பிப்பிக், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். ஒரு இடத்தில் குழந்தையை ஒளித்துவைத்துவிட்டு, உணவு தேடிச் செல்கிறான். திரும்ப வந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. வெளிச்சத்தின் விளிம்பில் அந்தக் குழந்தை நின்று கொண்டிருக்கிறது. அதன் முன்னே, அவனை விட பெரியதாய் ஒரு வேட்டை நாய்........திக் திக் தருணங்கள்.
ஒரு யூதக் குழந்தையை மையமாகக் கொண்டாலும், கம்யூனிசப் பார்வையில் கதை படைப்பு.
ஒரு சாரார் எல்லோருமே நல்லவர்களாகவும், பாசமும் ஈரமும் நிறைந்தவர்களாகவும். கொள்கைப் போரளிகளாகவுமான காட்சிப் படைப்புகள் ஒரு சார்புடைய நிலைமையைக் காட்டுகிறது. (மூலக் கதைக் கருவிலிருந்து பிசகாமல் இருக்கிறது. )
பிப்பிக்காக ஃப்ளோரியன் ஸ்டெட்டெரும், ஹோஃபலாக பீட்டர் ஷ்ணைடரும் - அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
ஹோலோகாஸ்ட்டைப் பற்றி நீங்கள் பார்க்கும் முதல் படம் இதுவெனில், நான் மேலே குறிப்பிட்ட 5 திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
சந்திப்போம், அடுத்த சினிமாவுடன்.
- சகி
குறிப்புகள் -
நாஜி - ( Nazi) - ஆங்கில உச்சரிப்பு ‘ நா-ட்-ஸீ’) - National Socialist German Workers' Party-ன் சுருக்கம். 1920 - 1945 வரை ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையில் இயங்கிய அரசியல் கட்சி.
S.S - (Schutzstaffel) - நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டு, லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற தனிப்படை. உலகப் போரில் ஜெர்மனி வீழ்த்தப்பட்ட பின், சர்வதேச இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு குற்ற அமைப்பாக அறிவிக்கப்பட்டது. போரின் உச்சத்தில், 1 லட்சம் பேர் கொண்ட அமைப்பாக இருந்தது.