Sunday, November 10, 2024



இணை


சாரல்மழை விட்டதும்

நம்பர் போட்ட மரமொன்றின் கிளையமர்ந்து

 பார்த்துப் பார்த்து கேட்கிறது மஞ்சள் மூக்கு ஆள்காட்டி.

 பதிலேதும் சொல்லாமல் ரசிக்கிறது

இறகுரசி அமர்ந்திருக்கும் இணையொன்று.

கேள்வி, பதிலுக்காக கேட்கப்படுகிறதா

தலையாட்டலுக்காக கேட்கப்படுகிறதா

 என்பதைப் புரிந்துகொள்வதில் ஒளிந்துள்ளது

சுமுகவாழ்வின் சூட்சுமம்.


-சகி





Thursday, August 9, 2018

சுயம்

ஆன்மீக அலசல் தொடங்கி
அணுமின் அறிவியல் வரை
ஒரு நிமிட விளக்கங்கள்
ஒலியாய், ஒளியாய், ஓவியமாய்
எல்லாம் படித்தபின்னே
இம்மீடியட் ஐன்ஸ்டீனாய்
சடார் சாக்ரடீஸாய்
ஜஸ்ட் லைக் தட் ஃப்ராய்டாய்
உணரும் நானும்
போர்வைக்குள் கண்மூடி
அயரும்போது
மனதுக்குள்
உலகையே மாற்றிப்போடும்
இரண்டே கேள்விகள்
“கதவைத் தாழிட்டேனா?
தோசை மாவு ஃப்ரிட்ஜிலிருக்கா?”

- சகி

Sunday, January 22, 2017

கூட்டம்

காக்கித் தொப்பி பலத்தினால கூட்டமெல்லாம் கலையுது
கலைஞன் எங்கே? தலைவன் எங்கே? தேடித்தேடி அலையுது
கணக்கு போட்ட வெள்ளவேட்டி நரிவேலைய பாக்குது
சாட்சியான கடலு மட்டும் விழுந்து எழுந்து சிரிக்குது


Tuesday, January 17, 2017

தட(ய)ங்கள்


நீர்த்துளி  வழியே  உலகம்  தெரிவதும்
உலகே  துளியில் துளியாய்த்  தெரிவதும்
பார்ப்பவர்  புத்தியின்  பரிமாணம்

பட்டாம்பூச்சியின்  சிறகில்  புயலும்
புயலில்  சிக்கிய  பூச்சியின்  இறகும்
காரணி  எதுவென
காரியம்  எதுவென
எதற்காராய்ச்சி?

இலையின்  நுனியில்  புறப்படும்  காற்றும்
காற்றின்  தோளில்  அசையும்  இலையும்
அதனாலிதுவென்ற  விளக்கமெதற்கு?

பத்தின்  மதிப்பு
ஒன்றிலாபூஜ்ஜியத்திலா?
உற்றுப்  பார்த்தால்
பத்தின்  மதிப்பு
கணினியில்  இரண்டே!!

கவிதையென்ன  கால்வலியா
காரணம்  தேடுவதற்கு?

மழலையின்  மழலையை
தாய்மையின்  தாய்மையை
பக்தனின்  பக்தியை
காதலர்  காதலை
நண்பரின்  நட்பை
ரசிகனின்  ரசனையைக்
கூறுபோட்டுக்  கூறுகாணல்
இயலுமா  என்ன?

நடந்து  பழகிய  கால்தடம்  நினைந்து
முன்னே  விரிந்த  வெண்மணல்  மறந்தால்
புதிய  தடங்கள்  பதிவது  எங்ஙனம்?

திருவிழாவில்  தொலைந்த  பிள்ளைகளாய்ப்
பயணம்  தொடர்வோம்
பின்பொருநாள்  ஒரே  படகில்
சந்திக்க  நேர்ந்தால்
காலம்  முடிவு  செய்யட்டும்
அது  காக்கையா  கமண்டலமா  என்று...

சகி

Monday, January 16, 2017

கொம்பு






முக்கொம்பு  வைத்தவன்  தலைக்கொம்பாலெங்கள்
முக்கொம்பு  நிறையுமோ  மூலவா?
எக்கொம்பு  கொண்டடித்தாலும்  கூர்சிவந்த
இக்கொம்பு  ஓநாய்கள்  குடல்கிழிக்கும்!!

- சகி

Sunday, November 13, 2016

அண்ணாமலை - பாகம் 4

முன்பொருநாள்..... 

காரும்  சிலபேரும்  திடீரென  வந்தனர் 
ஆக்களை  அவிழ்த்தனர் 
சாணத்தையும்  வைக்கோலையும்  சுத்தஞ்செய்தனர் 
கொடிகளும்  சுவரொட்டிகளும்  வைத்து  அசுத்தஞ்செய்தனர் 

சிலைபோலானான்  மலை... 
ஆர்செய்ததிதென்றான்.. 

வாக்குகேட்டு  வந்து  வென்று 
போக்கு  தெரியாமல்  போய் 
தேக்கி  வைத்த  பணமெண்ண  
  நேரமில்லா  நேர்மையில்லா 
போக்கிரியென்  றரிந்தான் 

தன்  நாலுகால்  நண்பர்கள்  புடைசூழ 
அம்மா  வீடுவிட்டு 
அம'¢மா'வீடு  புகுந்தான் 

எங்கும்  பணநெடி..பொறுத்தான்  ஒருநொடி.. 
அவிழ்த்தான்  நண்பர்களின்  கண்டக்கொடி.. 

அம்மா  அம்மா  வென்ற  பாசக்குரல்கள் 
வீடெங்கும்  ரீங்காரமிட்டது 

"ஆரடா  என்  வீடு  புகுந்தது 
 வீடுபுகுதலென்  வேலையல்லவா"  வென்று 
 கோரக்  குரலோன்  கோரினான் 

இழைத்துச்  செய்த  தேக்குப்  படிக்கட்டும் 
 அழைத்துச்  செய்த  காஷ்மீர்  கம்பளமும் 
பிழைப்புக்காய்  பால்கறக்கும்  இல்லாதவன்  மாடுகளால் 
குழைந்தே  போயின  சாணமும்  கோமியமும் 

ஆத்திரமடைந்தான்  இருபது  மோதிரத்தான்.... 

"ஆரிடம்  மோதினாய்  தெரியுமா 
 பேருடன்  இருக்கும்  நானுனை  என்ன  செய்வேனென்று 
 ஆரூடம்  கேட்டால்தான்  புரியுமா"  என்று 
 வேருடன்  பிளந்த  ஆல்போல்  ஆர்ப்பரித்தான் 
 
எதிரேயிருந்தது  மணல்  குன்றல்ல..
அனல்  குன்று ..
வெகுண்டெழுந்தது 

"பேரும்  பணமும்  காரும்  தனமும் 
ஊருள்  இருப்பதால்  பெரிதா  நீ? 
ஐந்தாண்டுக்கொரு  முறையெமையே  காண  
ஊருள்  வருவதால்  அரிதா  நீ?" 

படித்துப்  பிழைத்தல்  ஒருவகை  -  விதை 
வெடித்துப்  பிழைத்தல்  ஒருவகை-  புகை 
மடித்துப்  பிழைத்தலும்  ஒவ்வும்-  ஏழைமடி 
யடித்துப்  பிழைத்தல்  பிச்சையினும்  கீழ்மையே 

பணம்செய  ஆயிரம்  வழியுண்டு-  புனித 
அரசியல்  ஏனுனக்கு?? 

என்வழியில்  நான்செல்ல,     
சேதமேன்  அன்புக்கிழைக்கிறாய்? 
ஏனெனை  வம்புக்கிழுக்கிறாய்? 

என்  நண்பர்களால்  பால்  இயலும் 
அதனால்  எனக்கு  அரிசி  இயலும் 
இதைவிடுத்து  வேறொரு  அரசியலும் 
எனக்கு  வேண்டாம்  எனைவிடுங்களென்றான் 


காலணி  கொண்டு  காதணி  யருகே 
காதலின்றி  அறைந்தாற்போலிருந்தது... 

திரும்பாக்  குழந்தை 
திரும்பத்  திரும்பத் 
திரும்பும்  முயற்சிபோல் 
திருந்தாதான்  மனத்தில் 
திரும்ப  ஒலித்தன  அவ்வார்த்தைகள் 

மறுநாள்.. 
ஊரில்  கொள்ளையடித்தவன் 
வேரில்  வௌ¢ளையடித்திருந்தான் 
காரிலேறி  ஆயில்  வந்தான்-  நல்வார்த்தை 
ஈதவனை  ஈன்றவளிடத்தே  வந்தான் 

பெற்றாலிவன்  போல்  மகன்வேண்டும் 
தொழுவமிருக்கும்  இக்கோயில்  தெய்வமுன்னைத் 
தொழுதால்  தகுமென்றான் 
அதிகாலைப்  புல்நுனிப்  பனிபோல் 
அவள்கண்  பனித்தது... 

நல்லவனே....  உன்னால்  தேறினேன் 
மனிதனாய்  மாறினேன் 
உனக்கு  என்ன,  எப்பொழுது,  எங்கு  வேண்டுமானாலும் 
தயங்காமல்  கேள்  என்று 
சுட்ட  சங்காய்  சுடர்ந்தான்.. 
நிமிர்ந்த  நடையொடு  தொடர்ந்தான்..  

- சகி

Thursday, August 25, 2016

தைரியம்


தெரியாத சேதிகள் ஆயிரம் இருந்தும், நம் கண்ணைத் தராசாக்கி, கடிவாளப் பார்வைகொண்டு நாமே திடீர் நீதிபதிகளாகிறோம். நியாயங்கள் வழங்குகிறோம்.
சட்டையின் கிழிசல்களை வைத்து அடையாளங்கள் தைக்கிறோம்.
ஒட்டியுள்ள அழுக்கை வைத்து வரிசையில் நிற்க வைக்கிறோம்.

பெயரில் மட்டுமே செல்வத்தைக் கொண்டவனுக்கும், போலித் தெளிவு கொண்டவளுக்குமான ஒரு நிகழ்வே இப்பதிவு.





செம்மண் படிந்த தலையும்
செம்புக் கையணியும்
செருப்பில்லாக் காலும்
செல்வத்தின் அடையாளம்

தலைகுனிந்து நின்றான் செல்வம்
தவிர்க்கமுடியாமல்.
தளும்பிய கண்கள்
தடயம் காட்டின.

"எடுத்தியா இல்லையா?"
"எவ்வளவு தெரியுமா?"
"எங்கடா உங்க அப்பன்?"
எத்தனை கேள்விகள்
எதற்குமே விடையில்லை
எவரிடத்தும்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்

அகோரப் பசிபோல் வெட்கம்
அடங்காமல் பிடுங்கித் தின்ன
அடிபட்ட நாயாய் விம்மி
அப்படியே ஓடிப்போனான்

........................

வேகமாய் நடந்தாள்
வேர்வையின் துளிகள்
வேடிக்கை பார்க்க
வேகமாய் நடந்தாள்

இல்லாத நிலவு
இருட்டைப் பாய்ச்ச
இல்லாத நிழல்கள்
இருப்பதாய்ப் பயந்தாள்

தெருமுக்கில் கடையொன்று..
தெரிந்த கடைதான்..
தெரியத் தெரிய
தெம்பு பிறந்தது

சிகரெட்டுப் புகை சூழ
சினிமாக்கதை பேசி
சிரித்த குரல்கள்...
சிக்கனமாய் நடந்தாள்

கடைக் கண்களே
கடைசிக் கண்களாய்
கருத்தை உண்ணக்
கடகடத்தாள்....

கண்களும் முன்னே பார்க்கக்
கற்பனை பின்னே பாய
கறுப்பு வெளிச்சத்தில்
கரம்பட...... திகைத்தாள்

"கையைப் பிடிச்சிக்கோங்கக்கா"
 மையிருட்டில் ஒளிர்ந்தான் செல்வம்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்


- சகி