Sunday, January 22, 2017
Tuesday, January 17, 2017
தட(ய)ங்கள்
நீர்த்துளி வழியே உலகம் தெரிவதும்
உலகே துளியில் துளியாய்த் தெரிவதும்
பார்ப்பவர் புத்தியின் பரிமாணம்
பட்டாம்பூச்சியின் சிறகில் புயலும்
புயலில் சிக்கிய பூச்சியின் இறகும்
காரணி எதுவென
காரியம் எதுவென
எதற்காராய்ச்சி?
இலையின் நுனியில் புறப்படும் காற்றும்
காற்றின் தோளில் அசையும் இலையும்
அதனாலிதுவென்ற விளக்கமெதற்கு?
பத்தின் மதிப்பு
ஒன்றிலா? பூஜ்ஜியத்திலா?
உற்றுப் பார்த்தால்
பத்தின் மதிப்பு
கணினியில் இரண்டே!!
கவிதையென்ன கால்வலியா
காரணம் தேடுவதற்கு?
மழலையின் மழலையை
தாய்மையின் தாய்மையை
பக்தனின் பக்தியை
காதலர் காதலை
நண்பரின் நட்பை
ரசிகனின் ரசனையைக்
கூறுபோட்டுக் கூறுகாணல்
இயலுமா என்ன?
நடந்து பழகிய கால்தடம் நினைந்து
முன்னே விரிந்த வெண்மணல் மறந்தால்
புதிய தடங்கள் பதிவது எங்ஙனம்?
திருவிழாவில் தொலைந்த பிள்ளைகளாய்ப்
பயணம் தொடர்வோம்
பின்பொருநாள் ஒரே படகில்
சந்திக்க நேர்ந்தால்
காலம் முடிவு செய்யட்டும்
அது காக்கையா கமண்டலமா என்று...
- சகி
Monday, January 16, 2017
Subscribe to:
Posts (Atom)